mercredi 13 novembre 2013

நான் போட்ட உடுப்பு

நான் போட்ட உடுப்பு 




இடுப்பைத் தொடும் தலைமயிருடனும்
அதில் ,
சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும்
மிடியுடனும்  புறொக்குடனும்
இல்லாவிட்டால்  ,
ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் 
வளைய வந்த எனது பெண்களில் ,
நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!!

நான் அணிந்த உடைகள்
நான் விரும்பி அணிந்த உடைகள் !!!!
இந்த உடைகள்
என்னைப் போன்ற
பல பெண்களின்
அடிமை வாழ்வை உடைத்தெறியும் .......
அதில் ,
எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும்
எனது சொந்த மண்ணும்
ஒருநாள் விடுதலை பெறும் ...
அதுவரை ,
நித்திரை என் அகராதியில் இல்லை ....

மைத்திரேயி
13 கார்த்திகை 2013

jeudi 7 novembre 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு 06 ( மரவள்ளி கிழங்கு புட்டு )

மரவள்ளி கிழங்கு புட்டு




இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு ஆனால் நல்ல சத்தான சாப்பாடு .

என்ன வேணும் :

மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ
பனங்கட்டி 1 - 3 குட்டான்
ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு )
பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்டாய் வெட்டி தோலை உரியுங்கோ வெட்டின கிழங்கை ஸ்கிறைப்பறிலை தேச்சு சின்ன துருவல் ஆக்குங்கோ ஒரு புட்டுப் பானையிலை மரவள்ளிக் கிழங்கு துருவலை போட்டு ஒரு 20 நிமிசத்திலை இருந்து 30 நிமிசம் வரை அவியுங்கோ மரவள்ளிக் கிழங்கு துருவல் அவிஞ்ச உடனை சூட்டோடை உப்பு ஏலக்காய் பட்டர் எல்லாத்தையும் போட்டு கலவுங்கோ இப்ப நீங்கள் சத்தான புட்டு சாப்பிடலாம்


மைத்திரேயி

07/11/2013

jeudi 29 août 2013

அவர்கள் பார்வையில்

அவர்கள் பார்வையில்


 

எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.

அ.சங்கரி



http://noolaham.net/project/01/16/16.htm

jeudi 18 juillet 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு 04 ( வட்டிலப்பம் )

வட்டிலப்பம்




என்ன வேணும்:

முட்டை 10

கித்துள் பனங்கட்டி 750 g

முந்திரிகொட்டை ( கஜூ ) 100g

தேங்காய்ப்பால் 2 கப்

ஏலக்காய் தேவையான அளவு

பட்டர் தேவையான அளவு


கூட்டல்:

கித்துள் பனங்கட்டியை சின்னதாய் வெட்டி தேங்காய் பாலுடன் நன்றாக கரையுங்கோ . முட்டையை நன்றாக அடிச்சு வையுங்கோ . பின்பு ஏலக்காயை பொடிசெய்து அடிச்ச முட்டையோடை சேருங்கோ . முந்திரிக்கொட்டையை சின்னதாய் வெட்டி கலவையிலை போடுங்கோ . பின்பு தேங்காய்பால் கலவையையும் ஒன்றாய் கலக்குங்கோ . இப்போ வட்டிலப்பதின்ரை கலவை தயார் . இந்த கலவையை பட்டர் பூசின சின்ன கிண்ணங்களிலை ஊத்தி நீராவியிலை ( steamer ) வேகவையுங்கோ .


மைத்திரேயி

18/07/2013

lundi 24 juin 2013

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!


என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........



உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!



என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????



நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு

மைத்திரேயி

19/06/2013

dimanche 16 juin 2013

தயிர் சாதம்

 தயிர் சாதம்



என்ன வேணும்???


அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு .

மோர்மிளகாய் 4 .

சின்னவெங்காயம் 6 .

கடுகு தாளிக்க .

இஞ்சி 1 துண்டு .

கஜூ 10 .

உப்பு தேவையான அளவு .

நல்லெண்ணை தேவையான அளவு .

கொத்தமல்லி இலை தேவையான அளவு .

தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி .

கூட்டல் :


ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் , கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் .

பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ .
 

*** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ .
 

மைத்திரேயி
16/06/2013

samedi 15 juin 2013

கதலியும் மாங்கனியும்

 கதலியும் மாங்கனியும்


மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்!

வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள்.

‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’

‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான் அக்கா ஆவேன்?’

‘ஐயோ பாவம்! எங்கள் அன்னையால் புஷ்பிக்கப்பட்ட பூக்களில் உள்ள ஒட்சின் எனும் ஓமோனின் செறிவு, சூலகங்கள் சுயமாக விருத்தியடைதலைத் தூண்டப் போதுமானது என்பதால், மகரந்தச் சேர்க்கையும், கருக்கட்டலும் இன்றியே நாம் கனிகளானோம் என்பதுதான் உண்மை, அக்கா.’

‘முறைதவறிக் கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்து, உன்னைப் பெற்றெடுத்த உன்தாயை, ஊதாரி என்றுதானே, நீயும் உன் உடன்பிறந்தோரும் முதிர்ந்தவுடன் அடியோடு வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள்? மாசுமறுவற்ற மரபுவழி வந்த என்னைப் பார்த்து இனியும் அக்கா என்று கூப்பிடாதே!’

ஆணவத் தகிப்பில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தபோதே, ஒருகணம்; பதைபதைத்துப் பிரசவ வேதனையால் உடல் துடித்தாள், மாங்களியாள்.

அகமும் புறுமும் அப்பழுக்கற்றவளெனக் கொக்கரித்த கொடியவளின் மார்பகத்தைத் துளைத்தபடி, உள்ளிருந்தவாறு அவளது உடலைச் சுகித்த கருவண்டொன்று, கணப்பொழுதில் வெளிப்பட்டுக் காற்றில் பறந்தது.

புற்றெடுத்தாற்போல ஊறு விளைவித்து நிற்கும் உடற் புண்ணை மறைப்பதற்கெனப் புரள முயன்று வீணே தோற்றுப் போனாள்.

நாவடக்கமற்ற மாங்கனியாள் நாணத்தால் சாம்பினாள்!

‘முறை தவறிப் பிறந்தவரெல்லாம் குறைந்தவருமல்ல
முறையாகப் பிறந்தவரெல்லாம் சிறந்தவருமல்ல’


கதலிவாழைக் கன்னியர்க்கெல்லாம் இவ்வாறு கும்மியடித்துப் பாடியாட வேண்டும் போலிருந்தும், அடக்கம் கருதி அமைதி காத்தனர்.

குணத்தால் உயர்ந்தவர்கள், அவர்கள்!

மைத்திரேயி

jeudi 4 avril 2013

சீனியம்மா

சீனியம்மா





என்னைப்பெற்றது என் அம்மாவானாலும்

சிறுவயதில் உன்மடிதானே என் இடம் 
என் சீனியம்மா ....
நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி
சித்திரமாய் என்னை வளர்த்தாய் 
உன்கை பிடித்தே 
நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது 
உலகமே என்கால் அடியில்.......


காலம் என்ற நதியில் 

கரைபுரண்ட வெள்ளத்தில் 
நீயும் நானும் மல்லுக்கட்டினோம் .....
ஒவ்வரு வருடமும் இங்கு 
தோல் உரிந்து முடி உதிர்ந்து 
குளிர் வேளையில் உறையும் 
ஃபைன் மரங்கூட வெய்யில்பட 
புதுப்பெண் போல் பொலிவு பெறும்....


குருவிகளும் தேன் வண்டுகளும்

ஃபைன் மரத்தை சுத்திவர ,
உனக்கும் எனக்கும் மட்டும் 
ஏன் சீனியம்மா 
கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்
பொலிவு இழக்கின்றோம் ?????


காலம் கிழித்த கலண்டரில் 

எங்களுக்கு மட்டும் 
ஏன் இரக்கம் இல்லை ????
என் சீனியம்மா 
மீண்டும் சின்னக் குழந்தையாய்
பாயிலே படுத்துப் போனாள் .....
நான் வருகிறேன் சீனியம்மா
உன் அருகில் நான் வருகின்றேன்
மீண்டும் பொறுப்பான மகளாக !!!!!!!!!

மைத்திரேயி
04/04/2013

mercredi 13 mars 2013

மைத்திரேயின் சமையல் கட்டு 03

கோதுமை அரிசிப் புட்டு ( ஓட்ஸ் புட்டு )



என்ன தேவை :

கோதுமை அரிசி ( ஓட்ஸ் ) 2 கப் .
ரவை வறுத்தது 1 / 2 கப் .
தேங்காய் பூ 1 / 2 கப்.
உப்பு ( தேவையான அளவு ).

கூட்டல்:

ஒரு சட்டியிலை கோதுமை அரிசியுடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீ மரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர்.

பி கு :

கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது ( precooked wheat ) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது .

எனக்கு தெரிஞ்ச புட்டு ரிப்ஸ்:

01 குரக்கன் புட்டுக்கு :

புட்டை குழைத்து அதோடை கொஞ்சம் உழுத்தம் மாவை கலந்து அவியுங்கோ அப்ப நல்ல வாசம் வரும் . புட்டை தேங்காய் பூவோடை கலக்கிற நேரம் , கொஞ்சம் பட்டர் சேர்து கலந்தால் புட்டு நல்ல மென்மையாக வரும் .

02 ஒடியல் புட்டுக்கு :

இதனுடன் வெண்டிக்காய் , கத்தரிக்காய் , வாழைக்காய் பச்சைமிளகாய் , சின்னவெங்காயம் , கொஞ்சம் மாங்காய் எல்லாவற்றையும் சின்னதாய் வெட்டி ,  ஒடியல் மாவை புட்டுக்கு குழைப்பது மாதிரி குழைச்சு அவியுங்கோ . பின்பு தேங்காய் பூவைக் கலவுங்கோ .

மைத்திரேயி
13/03/2013

jeudi 28 février 2013

மைத்திரேயின் சமையல் கட்டு 02

பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya )



என்னவேணும்:

சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ.
பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 .
உள்ளி 3 பல்லு .
வினிகர் 2 மேசைக்கரண்டி.
சீனி அரைத் தேக்கரண்டி .
தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி.
எண்ணை ( தேவையான அளவு ).
உப்பு ( தேவையான அளவு ).
மஞ்சள் தூள் ( சிறிதளவு ) .
பச்சை மிளகாய்  4

கூட்டல்:

கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் ,  உள்ளி எல்லாவற்றையும்  நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு , மெதுவான வெக்கையில்  5 அல்லது பத்து நிமிடங்கள் விடுங்கோ.

பிகு :

** வெதுப்பியில் உள்ள வெதுப்பி தட்டில் சிறிது எண்ணை விட்டு வெட்டிய கத்தரிக்காயை போட்டு , அதற்கு மேலையும் சிறிது எண்ணை விட்டு நன்றாக கலந்து , 300 C டிகிறியில் கிறிலில் செற் பண்ணி பொரிக்கலாம் . இப்பிடி செய்தால் குறைந்த எண்ணை முடியும் . அத்துடன் வீடும் பொரித்த மணம் மணக்காது . இப்படித்தான் நான் வீட்டில் செய்வேன் .

*** இந்த பிறிங்ஜோல் பாய் மிகவும் சுலமான செய்முறை . முக்கியமாய் தனிய இருக்கிற பெடியளுக்கு ஏற்றது . இதை நீங்கள் பிரியாணி , ஃபிறைட் றைஸ் போன்றவற்றுக்கு ஒரு பக்கத் துணையா சேத்து சாப்பிடலாம் .

மைத்திரேயி
28/02/2013



samedi 23 février 2013

போய்வா காதலா போய்வா !!!

 போய்வா காதலா போய்வா !!!
 


என்னை பிடித்த என் காதலா.....
என்னை சீண்டுவதிலே
என்ன இன்பம் உனக்கு??  
உள்ளம் குமுறியே
ஊமையான நான் ,
பாடுவேன் என்று
ஏன் நினைக்கின்றாய்??

உன் பார்வையில்
நான் ஒரு கொடுமைக்காரி....
அப்படியே இருப்பேன் நான் உனக்கு.
வார்த்தை ஊசியால்
என்மனதை குத்துவதை விட்டுவிடு...
என்மனம் பாறையாகி
நாளாச்சு என்காதலா .
எங்கள் காதல் வளரும்
என்று எனக்குத் தெரியவில்லை ...

என் கை பிடிக்க முதலே
என் கண்ணீல் நீர் வருவது
உனக்கு இன்பம்.......
உன் நினைவை மறக்க
நான் நினைக்கின்றேன்
போய்வா காதலா போய்வா...
நாம் நடந்த கடற்கரையில்
என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........
போய்வா காதலா போய்வா!!!!

மைத்திரேயி
23 02 2013
 

jeudi 21 février 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு

உள்ளிக் குழம்பு


என்னவேணும் ???

உள்ளி 6 பிடி
உரிச்ச சின்னவெங்காயம் 5
பச்சைமிளகாய் 3
கறிவேப்பமிலை ( தேவையான அளவு )
தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி
பழப்புழி ( தேவையான அளவு )
மிளகு தூள் அரை தேக்கறண்டி
முதல் தேங்காய் பால் 1 அரைக் கப்
நல்லெண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை  நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ .  தூள் மணம் எடுபட கொதிக்க விட்டு , துப்பரவாக்கின முழு உள்ளியை போடுங்கோ . முதல் தேங்காய்ப் பாலையும் சேருங்கோ குழம்பு தடிக்கமட்டும் மெதுவான வெக்கையிலை வேகவையுங்கோ . 

பிகு : மண்சட்டி இல்லாதவை நோர்மல் சட்டியிலை செய்யலாம் . ஆனால் ரேஸ்ற்ரிலை கொஞ்சம் வித்தாயாசப்படும்   .

இந்த உள்ளி குழம்பு உடம்புக்கு நல்லது . வாயுத்தொல்லைக்கு நல்லது . பக்கவிளைவுகள் இல்லாதது .

மைத்திரேயி
21/02/2013

mardi 19 février 2013

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ?? 
 
 
 


வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் .  அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ??  என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , நீங்கள் ஒரு பொய் சொல்ல வெளிக்கிட்டால் பின்பு நீங்கள் சொல்லவாற உண்மையையும் நம்பேலாது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் .  கள உறவுகளே உங்கள் கருத்துக்களை இதில் பதியுங்கள் . இந்தப்பதிவும் கருத்துக்களும் சிலவேளை படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் .

மைத்திரேயி
19/02/2013

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117413

mardi 5 février 2013

மழை



















சோ...... என்று பெய்த மழை
சொல்லாமல் வந்த மழை
சோம்பி இருந்த என் மனசு
சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க.....
சொட்டுச் சொட்டாய் வந்த மழை
முற்றத்தில் முத்தமிட ,
வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க.....

வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம்
அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர.....
 நானும் குழந்தையாகிப் போனாலும் , 
பெய்த மழையின் வேகத்தில்
வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!!
என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது
அழையாத விருந்தாளியாய் ,
 நான் பானைகளால் கவசம் போட்டாலும்
அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்.....

மைத்திரேயி
05/02/2013

mercredi 30 janvier 2013

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??


இருட்டில் இருந்த உங்களுக்கு
வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள்
உங்கள் பசியெடுத்தபொழுது
குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்.....
உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய்
துடித்தவர்கள் நாங்கள்.......

உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும்
குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்.....
எங்களுக்கு என்று ஒரு சந்தோசம்
நீங்கள் கண்டதுண்டா ??

உங்கள் வாழ்கையில்
மெழுகுதிரியாய் எரியும் எங்களை
ஒருகணம் உங்கள் ,
பார்வை திரும்பியதுண்டா ??

உங்கள் ஏற்றம் இறக்கம்
எதிலும் ஒன்றாய் கலந்த
எங்களை
ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ??

மைத்திரேயி
19/01/2013


dimanche 13 janvier 2013

அவளை யார் அறிவார் ???


பால்குடி மாறிப்
பத்துவயது நடந்தபொழுது
அடிவயிற்றில் ஓர்வலி
கீறலாய் உதித்தது
எதுவுமே புரியாத அவளுக்கு
அவள் அம்மா எடுத்துரைத்தாள்
பருவத்தின் அழைப்பு மணியை
அவள் வாழ்வு பூராக
அவளுடன் தொடரப்போகும்
இந்தப் புரியாத வலி
அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது

பருவத்தின் தூரிகைகள்
அவள் உடலில்
பக்குவமாய்க் கோலமிட
அவள் பள்ளிக் கூட்டுகள்
பதறியே அவளை நோக்க
பாவை அவள் மனதும்
கர்வத்தால் பறந்தே திரிந்தது
 
முகத்தைக் காட்டும் கண்ணாடி
அவள் உற்ற தோழியானது
றெக்ஸ்சோனாவும்
பெயர் அண்ட் லவ்லியும்
அடிக்கடி கரைந்தே போனது

காலதேவன் போட்ட கோலம்
அவளை கட்டிளம் குமரியாக்க
அவளை கட்டியேபோட
அவள் அப்பா
அலைமோதி அலைந்தார்

வெள்ளை நிறத்தவனாம்
வெளிநாட்டு மாப்பிளையாம்
என்ஜினியராம்
கைநிறைய யூறோவாம்
என ஊரெங்கும் இதே பேச்சு

பந்தாவாவாக வந்த பொலிகாளை
வக்கிரமாய் அவளைப் பார்க்க
அவள் மனதில் ஊசியாகக் குத்தியது
பத்தில் வந்த அதே வலி
அவள்மனவலி அவள்
அம்மா அப்பாவின் கண்ணீர் முன்
கதிரவனைக் கண்ட
பனித்துளி போல பாகாய் உருண்டோட
அவள் மனவலி மட்டும்
அவள் மனதில் ஆழமாய்க் கோடு கிழித்தது

பலவேளை பொலிகாளை
அவள் சம்மதமின்றிப் பொங்கியெள
மனம் மரத்த அவள் மரக்கட்டையானாள்
காலதேவன் போட்ட ஓட்டத்தில்
அவள்மனவலியும் ஓடிச்செல்ல
அவன் அம்மா
அவளுக்கு வைத்த பெயர் " மலடி "     

மைத்திரேயி

mercredi 2 janvier 2013

எட்டி உதை தருவீரா ??



தேனினும் இனிய தெள்ளு தமிழில்
தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன்
பாவிசைக்க வந்தாலும்
பக்குவமாய் பாடுவேனா ??
தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!!

ஏறுமுகமாய் இருந்தவேளை
பருத்தி விற்றது என்நகரம்
அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய்
நிரைகட்டியது ஒருகாலம்
சுவையான வடையும்
என்நகரில்  சுவைக்கவே ஓடிவருவர்
அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு
என்பெயர் மைத்திரேயி !!
ஆவலாய் வந்தவளை
அள்ளிக் கொள்வீரா ??
எட்டியே நின்று
எட்டி உதை தருவீரா ??

மைத்திரேயி