samedi 15 juin 2013

கதலியும் மாங்கனியும்

 கதலியும் மாங்கனியும்


மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்!

வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள்.

‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’

‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான் அக்கா ஆவேன்?’

‘ஐயோ பாவம்! எங்கள் அன்னையால் புஷ்பிக்கப்பட்ட பூக்களில் உள்ள ஒட்சின் எனும் ஓமோனின் செறிவு, சூலகங்கள் சுயமாக விருத்தியடைதலைத் தூண்டப் போதுமானது என்பதால், மகரந்தச் சேர்க்கையும், கருக்கட்டலும் இன்றியே நாம் கனிகளானோம் என்பதுதான் உண்மை, அக்கா.’

‘முறைதவறிக் கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்து, உன்னைப் பெற்றெடுத்த உன்தாயை, ஊதாரி என்றுதானே, நீயும் உன் உடன்பிறந்தோரும் முதிர்ந்தவுடன் அடியோடு வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள்? மாசுமறுவற்ற மரபுவழி வந்த என்னைப் பார்த்து இனியும் அக்கா என்று கூப்பிடாதே!’

ஆணவத் தகிப்பில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தபோதே, ஒருகணம்; பதைபதைத்துப் பிரசவ வேதனையால் உடல் துடித்தாள், மாங்களியாள்.

அகமும் புறுமும் அப்பழுக்கற்றவளெனக் கொக்கரித்த கொடியவளின் மார்பகத்தைத் துளைத்தபடி, உள்ளிருந்தவாறு அவளது உடலைச் சுகித்த கருவண்டொன்று, கணப்பொழுதில் வெளிப்பட்டுக் காற்றில் பறந்தது.

புற்றெடுத்தாற்போல ஊறு விளைவித்து நிற்கும் உடற் புண்ணை மறைப்பதற்கெனப் புரள முயன்று வீணே தோற்றுப் போனாள்.

நாவடக்கமற்ற மாங்கனியாள் நாணத்தால் சாம்பினாள்!

‘முறை தவறிப் பிறந்தவரெல்லாம் குறைந்தவருமல்ல
முறையாகப் பிறந்தவரெல்லாம் சிறந்தவருமல்ல’


கதலிவாழைக் கன்னியர்க்கெல்லாம் இவ்வாறு கும்மியடித்துப் பாடியாட வேண்டும் போலிருந்தும், அடக்கம் கருதி அமைதி காத்தனர்.

குணத்தால் உயர்ந்தவர்கள், அவர்கள்!

மைத்திரேயி

Aucun commentaire:

Enregistrer un commentaire