mercredi 30 janvier 2013

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??


இருட்டில் இருந்த உங்களுக்கு
வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள்
உங்கள் பசியெடுத்தபொழுது
குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்.....
உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய்
துடித்தவர்கள் நாங்கள்.......

உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும்
குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்.....
எங்களுக்கு என்று ஒரு சந்தோசம்
நீங்கள் கண்டதுண்டா ??

உங்கள் வாழ்கையில்
மெழுகுதிரியாய் எரியும் எங்களை
ஒருகணம் உங்கள் ,
பார்வை திரும்பியதுண்டா ??

உங்கள் ஏற்றம் இறக்கம்
எதிலும் ஒன்றாய் கலந்த
எங்களை
ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ??

மைத்திரேயி
19/01/2013


dimanche 13 janvier 2013

அவளை யார் அறிவார் ???


பால்குடி மாறிப்
பத்துவயது நடந்தபொழுது
அடிவயிற்றில் ஓர்வலி
கீறலாய் உதித்தது
எதுவுமே புரியாத அவளுக்கு
அவள் அம்மா எடுத்துரைத்தாள்
பருவத்தின் அழைப்பு மணியை
அவள் வாழ்வு பூராக
அவளுடன் தொடரப்போகும்
இந்தப் புரியாத வலி
அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது

பருவத்தின் தூரிகைகள்
அவள் உடலில்
பக்குவமாய்க் கோலமிட
அவள் பள்ளிக் கூட்டுகள்
பதறியே அவளை நோக்க
பாவை அவள் மனதும்
கர்வத்தால் பறந்தே திரிந்தது
 
முகத்தைக் காட்டும் கண்ணாடி
அவள் உற்ற தோழியானது
றெக்ஸ்சோனாவும்
பெயர் அண்ட் லவ்லியும்
அடிக்கடி கரைந்தே போனது

காலதேவன் போட்ட கோலம்
அவளை கட்டிளம் குமரியாக்க
அவளை கட்டியேபோட
அவள் அப்பா
அலைமோதி அலைந்தார்

வெள்ளை நிறத்தவனாம்
வெளிநாட்டு மாப்பிளையாம்
என்ஜினியராம்
கைநிறைய யூறோவாம்
என ஊரெங்கும் இதே பேச்சு

பந்தாவாவாக வந்த பொலிகாளை
வக்கிரமாய் அவளைப் பார்க்க
அவள் மனதில் ஊசியாகக் குத்தியது
பத்தில் வந்த அதே வலி
அவள்மனவலி அவள்
அம்மா அப்பாவின் கண்ணீர் முன்
கதிரவனைக் கண்ட
பனித்துளி போல பாகாய் உருண்டோட
அவள் மனவலி மட்டும்
அவள் மனதில் ஆழமாய்க் கோடு கிழித்தது

பலவேளை பொலிகாளை
அவள் சம்மதமின்றிப் பொங்கியெள
மனம் மரத்த அவள் மரக்கட்டையானாள்
காலதேவன் போட்ட ஓட்டத்தில்
அவள்மனவலியும் ஓடிச்செல்ல
அவன் அம்மா
அவளுக்கு வைத்த பெயர் " மலடி "     

மைத்திரேயி

mercredi 2 janvier 2013

எட்டி உதை தருவீரா ??



தேனினும் இனிய தெள்ளு தமிழில்
தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன்
பாவிசைக்க வந்தாலும்
பக்குவமாய் பாடுவேனா ??
தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!!

ஏறுமுகமாய் இருந்தவேளை
பருத்தி விற்றது என்நகரம்
அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய்
நிரைகட்டியது ஒருகாலம்
சுவையான வடையும்
என்நகரில்  சுவைக்கவே ஓடிவருவர்
அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு
என்பெயர் மைத்திரேயி !!
ஆவலாய் வந்தவளை
அள்ளிக் கொள்வீரா ??
எட்டியே நின்று
எட்டி உதை தருவீரா ??

மைத்திரேயி