jeudi 28 février 2013

மைத்திரேயின் சமையல் கட்டு 02

பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya )



என்னவேணும்:

சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ.
பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 .
உள்ளி 3 பல்லு .
வினிகர் 2 மேசைக்கரண்டி.
சீனி அரைத் தேக்கரண்டி .
தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி.
எண்ணை ( தேவையான அளவு ).
உப்பு ( தேவையான அளவு ).
மஞ்சள் தூள் ( சிறிதளவு ) .
பச்சை மிளகாய்  4

கூட்டல்:

கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் ,  உள்ளி எல்லாவற்றையும்  நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு , மெதுவான வெக்கையில்  5 அல்லது பத்து நிமிடங்கள் விடுங்கோ.

பிகு :

** வெதுப்பியில் உள்ள வெதுப்பி தட்டில் சிறிது எண்ணை விட்டு வெட்டிய கத்தரிக்காயை போட்டு , அதற்கு மேலையும் சிறிது எண்ணை விட்டு நன்றாக கலந்து , 300 C டிகிறியில் கிறிலில் செற் பண்ணி பொரிக்கலாம் . இப்பிடி செய்தால் குறைந்த எண்ணை முடியும் . அத்துடன் வீடும் பொரித்த மணம் மணக்காது . இப்படித்தான் நான் வீட்டில் செய்வேன் .

*** இந்த பிறிங்ஜோல் பாய் மிகவும் சுலமான செய்முறை . முக்கியமாய் தனிய இருக்கிற பெடியளுக்கு ஏற்றது . இதை நீங்கள் பிரியாணி , ஃபிறைட் றைஸ் போன்றவற்றுக்கு ஒரு பக்கத் துணையா சேத்து சாப்பிடலாம் .

மைத்திரேயி
28/02/2013



samedi 23 février 2013

போய்வா காதலா போய்வா !!!

 போய்வா காதலா போய்வா !!!
 


என்னை பிடித்த என் காதலா.....
என்னை சீண்டுவதிலே
என்ன இன்பம் உனக்கு??  
உள்ளம் குமுறியே
ஊமையான நான் ,
பாடுவேன் என்று
ஏன் நினைக்கின்றாய்??

உன் பார்வையில்
நான் ஒரு கொடுமைக்காரி....
அப்படியே இருப்பேன் நான் உனக்கு.
வார்த்தை ஊசியால்
என்மனதை குத்துவதை விட்டுவிடு...
என்மனம் பாறையாகி
நாளாச்சு என்காதலா .
எங்கள் காதல் வளரும்
என்று எனக்குத் தெரியவில்லை ...

என் கை பிடிக்க முதலே
என் கண்ணீல் நீர் வருவது
உனக்கு இன்பம்.......
உன் நினைவை மறக்க
நான் நினைக்கின்றேன்
போய்வா காதலா போய்வா...
நாம் நடந்த கடற்கரையில்
என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........
போய்வா காதலா போய்வா!!!!

மைத்திரேயி
23 02 2013
 

jeudi 21 février 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு

உள்ளிக் குழம்பு


என்னவேணும் ???

உள்ளி 6 பிடி
உரிச்ச சின்னவெங்காயம் 5
பச்சைமிளகாய் 3
கறிவேப்பமிலை ( தேவையான அளவு )
தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி
பழப்புழி ( தேவையான அளவு )
மிளகு தூள் அரை தேக்கறண்டி
முதல் தேங்காய் பால் 1 அரைக் கப்
நல்லெண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை  நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ .  தூள் மணம் எடுபட கொதிக்க விட்டு , துப்பரவாக்கின முழு உள்ளியை போடுங்கோ . முதல் தேங்காய்ப் பாலையும் சேருங்கோ குழம்பு தடிக்கமட்டும் மெதுவான வெக்கையிலை வேகவையுங்கோ . 

பிகு : மண்சட்டி இல்லாதவை நோர்மல் சட்டியிலை செய்யலாம் . ஆனால் ரேஸ்ற்ரிலை கொஞ்சம் வித்தாயாசப்படும்   .

இந்த உள்ளி குழம்பு உடம்புக்கு நல்லது . வாயுத்தொல்லைக்கு நல்லது . பக்கவிளைவுகள் இல்லாதது .

மைத்திரேயி
21/02/2013

mardi 19 février 2013

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ?? 
 
 
 


வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் .  அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ??  என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , நீங்கள் ஒரு பொய் சொல்ல வெளிக்கிட்டால் பின்பு நீங்கள் சொல்லவாற உண்மையையும் நம்பேலாது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் .  கள உறவுகளே உங்கள் கருத்துக்களை இதில் பதியுங்கள் . இந்தப்பதிவும் கருத்துக்களும் சிலவேளை படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் .

மைத்திரேயி
19/02/2013

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117413

mardi 5 février 2013

மழை



















சோ...... என்று பெய்த மழை
சொல்லாமல் வந்த மழை
சோம்பி இருந்த என் மனசு
சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க.....
சொட்டுச் சொட்டாய் வந்த மழை
முற்றத்தில் முத்தமிட ,
வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க.....

வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம்
அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர.....
 நானும் குழந்தையாகிப் போனாலும் , 
பெய்த மழையின் வேகத்தில்
வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!!
என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது
அழையாத விருந்தாளியாய் ,
 நான் பானைகளால் கவசம் போட்டாலும்
அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்.....

மைத்திரேயி
05/02/2013