lundi 24 juin 2013

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!


என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........



உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!



என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????



நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு

மைத்திரேயி

19/06/2013

dimanche 16 juin 2013

தயிர் சாதம்

 தயிர் சாதம்



என்ன வேணும்???


அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு .

மோர்மிளகாய் 4 .

சின்னவெங்காயம் 6 .

கடுகு தாளிக்க .

இஞ்சி 1 துண்டு .

கஜூ 10 .

உப்பு தேவையான அளவு .

நல்லெண்ணை தேவையான அளவு .

கொத்தமல்லி இலை தேவையான அளவு .

தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி .

கூட்டல் :


ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் , கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் .

பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ .
 

*** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ .
 

மைத்திரேயி
16/06/2013

samedi 15 juin 2013

கதலியும் மாங்கனியும்

 கதலியும் மாங்கனியும்


மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்!

வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள்.

‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’

‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான் அக்கா ஆவேன்?’

‘ஐயோ பாவம்! எங்கள் அன்னையால் புஷ்பிக்கப்பட்ட பூக்களில் உள்ள ஒட்சின் எனும் ஓமோனின் செறிவு, சூலகங்கள் சுயமாக விருத்தியடைதலைத் தூண்டப் போதுமானது என்பதால், மகரந்தச் சேர்க்கையும், கருக்கட்டலும் இன்றியே நாம் கனிகளானோம் என்பதுதான் உண்மை, அக்கா.’

‘முறைதவறிக் கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்து, உன்னைப் பெற்றெடுத்த உன்தாயை, ஊதாரி என்றுதானே, நீயும் உன் உடன்பிறந்தோரும் முதிர்ந்தவுடன் அடியோடு வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள்? மாசுமறுவற்ற மரபுவழி வந்த என்னைப் பார்த்து இனியும் அக்கா என்று கூப்பிடாதே!’

ஆணவத் தகிப்பில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தபோதே, ஒருகணம்; பதைபதைத்துப் பிரசவ வேதனையால் உடல் துடித்தாள், மாங்களியாள்.

அகமும் புறுமும் அப்பழுக்கற்றவளெனக் கொக்கரித்த கொடியவளின் மார்பகத்தைத் துளைத்தபடி, உள்ளிருந்தவாறு அவளது உடலைச் சுகித்த கருவண்டொன்று, கணப்பொழுதில் வெளிப்பட்டுக் காற்றில் பறந்தது.

புற்றெடுத்தாற்போல ஊறு விளைவித்து நிற்கும் உடற் புண்ணை மறைப்பதற்கெனப் புரள முயன்று வீணே தோற்றுப் போனாள்.

நாவடக்கமற்ற மாங்கனியாள் நாணத்தால் சாம்பினாள்!

‘முறை தவறிப் பிறந்தவரெல்லாம் குறைந்தவருமல்ல
முறையாகப் பிறந்தவரெல்லாம் சிறந்தவருமல்ல’


கதலிவாழைக் கன்னியர்க்கெல்லாம் இவ்வாறு கும்மியடித்துப் பாடியாட வேண்டும் போலிருந்தும், அடக்கம் கருதி அமைதி காத்தனர்.

குணத்தால் உயர்ந்தவர்கள், அவர்கள்!

மைத்திரேயி